News

இந்தோனேசியாவில் படகு விபத்து: தேடும் பணிகள் தீவிரம்

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 78 பயணிகள் மற்றும் மாலுமிகளுடன் ‘கே.எம். நுருல் சல்சா’ என்ற படகு கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்றபோது, திடீரென இன்ஜின் பழுதடைந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

விபத்து நேரிட்டபோது, படகில் இருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த மீன்பிடி வலைகள், கார்க் துண்டுகள் மற்றும் கேன்களைக் கயிறுகளால் ஒன்றாகக் கட்டி, அதன் மீது ஏறி உயிர் பிழைத்துள்ளனர்.

மாலை இருள் சூழ்வதற்கு முன்னதாக, கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு ஆண், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 பேரையும் உள்ளூர் மீன்பிடி படகு ஒன்று கண்டறிந்து மீட்டது.

பலத்த காற்றின் காரணமாக தாங்கள் மற்ற குழுவினரிடமிருந்து பிரிந்துவிட்டதாக அவர்கள் மீட்புக் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 47 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடலில் மாயமான எஞ்சியவர்களைத் தேடும் பணியில் ஐந்து பெரிய கப்பல்கள், ஒரு உளவு விமானம் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு போக்குவரத்து பொதுவான ஒன்றாக இருந்தாலும், போதிய பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top