மாண்ட்ரீலுக்கு வெளியே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
சனிக்கிழமை மதியம், Sainte-Brigide-d’Iberville நகராட்சியில் உள்ள நெடுஞ்சாலை 10-க்கு அருகில், Rang des Écossais-க்கு அருகே ஒரு வயல்வெளியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், முதன்மை மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஹெலிகொப்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகவும் கியூபெக் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் பிரிஜிட் டோர்சைன்வில் கூறியுள்ளார்.
இதில், ஹெலிகொப்டரில் இருந்த நால்வரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதாக டோர்சைன்வில் கூறியுள்ளார். இருப்பினும், விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஹெலிகொப்டரின் உரிமையாளர், அது எங்கிருந்து புறப்பட்டது அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் குறித்த விவரங்களை காவல்துறையினரால் வழங்க முடியவில்லை.
அதன்பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது; SQ-வின் தீவிரக் குற்றங்கள் பிரிவு இவ்வழக்கை தன்வசம் எடுத்துள்ளது. கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம், விபத்து நடந்த இடத்திற்கு ஒரு புலனாய்வுக் குழுவை அனுப்பியுள்ளதை உறுதிப்படுத்தியது.
முதற்கட்டத் தகவல்களின் அடிப்படையில், ஹெலிகொப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சிக்கலுக்குள்ளாகி விபத்துக்குள்ளானதாக கியூபெக் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
