News

நோர்வே தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்: விசாரணைகள் தீவிரம்

ஒஸ்லோ – நோர்வேயின் தென்பகுதியில் உள்ள டிரம்மென் நகருக்கு அருகில் நேற்று(17.7.2026) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ஒஸ்லோவில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

எனினும், இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

நோர்வே தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்: விசாரணைகள் தீவிரம் | 100 Homes Reduced To Ashes In Norway Fire

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 60 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், வான்வழியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க உலங்குவானுர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீ தொடர்ந்து பரவி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கும் பரவியதால், நூற்றுக்கணக்கான பொதுமக்களைப் பொலிஸார் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

இந்தத் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் உடனடியாகக் கண்டறியப்படவில்லை. தீயணைப்புப் படையினரின் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தற்போது குடியிருப்புப் பகுதிகளில் பரவிய தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதியில் அணைக்கப்பட்ட போதிலும், பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள காடுகளுக்குள் பரவிய தீயை அணைக்கும் பணிகள் தற்போதும் சவாலாகத் தொடர்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top