வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி தத்தளித்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயின் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் மல்லோர்கா தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் படகு ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
