News

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை கடும் கண்டனம்

யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்திலிருந்து தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலைத் தடுப்பதும் குழப்புவதும் உயிரிகளின் மாண்புக்கு எதிரானது என்றும் யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், “பேராசை, சர்வாதிகாரம், இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவை களையப்பட்டு, அஹிம்சை ரீதியான முன்னெடுப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். வன்முறையைக் கடந்து வாழ்வை உறுதி செய்வதற்காகத் தனது உயிரைக் காணிக்கையாக்கிய திலீபனை மதிக்கின்றோம்.

அஹிம்சைக்காக ஆகுதியான அவரை அவமதிப்புக்கு உள்ளாக்கும் அனைத்து சக்திகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சமய நோக்கைக் கடந்து நினைவேந்தல் என்பது ஓர் அடிப்படை மனித உரிமை ஆகும்.

கலாசார வாழ்வில் பங்கேற்பதற்கான உரிமையை அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கும் ‘பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 15ஆவது பிரிவில்’ நினைவுகூரும் உரிமை வேரூன்றியுள்ளது.

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை கடும் கண்டனம் | Statue Thileepan Removal

 

வரையறைகளைப் புரிந்து, கட்டமைப்புகளை அறிந்து, பன்மைத்துவத்தை மதித்து, அனைவரும் தங்களது வரலாற்று அடையாளத்துடன் வாழ்வதைத் தடுப்பது மாண்பை நிராகரிப்பதாகும்.

அது ஆரோக்கியமானதல்ல. மாண்பு, சமத்துவம் மற்றும் ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தும் மக்கள் அரசியலை இருட்டடிப்பு செய்யும் கட்சி அரசியல், தனது வரையறைக்குள் மாத்திரம் செயற்பட வேண்டும்.

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலைத் தடுப்பது, குழப்புவது மற்றும் எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும்.

எனவே, அகிம்சைவாதியான திலீபனுக்கு அவமானம் ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கைவிட்டு, மக்கள் நினைவேந்தலை முன்னெடுக்க உரிய ஆரோக்கியமான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என்றுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top