கோப்பாய் மாவீரர்களை நினைவுகூரும் வகையிலான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.11.2026) கோப்பாய் துயிலுமில்லத்தில் மாலை 06.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இரண்டு மாவீரர்களின் தாயான துரைராசா ஞானாம்பிகை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். இன்றைய மாவீரர் நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள், மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியதுடன், சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, பலரும் கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவுகூர்ந்தமை அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கார்த்திகை மாதத்தில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், இம்முறையும் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
