தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டு தாக்குதல்களில் 18 பொதுமக்களும் 15 பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்களுக்கு பொறுப்பான பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட பதில் தாக்குதல்களில் சுமார் 92 துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் விடுத்துள்ள அறிக்கையில், பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டா உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கி தாரிகள் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை முன்னெடுத்தனர். குறிப்பாக மாகாணத்திலுள்ள 12 நகரங்களிலும் துணை நகரங்களிலும் பொலிஸ், துணை இராணுவ நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அரச கட்டடங்கள் என்பவற்றை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதனால் குவெட்டா மற்றும் அருகிலுள்ள சில முக்கிய நிர்வாகக் கட்டடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதோடு கையடக்க தொலைபேசி சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன. பிராந்திய ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
