அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் பாலமொன்று திறந்து விடப்படுவதைத் தடுக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை அமெரிக்க மிச்சிகன் மாநிலத்துடன் இணைக்கும் கோர்டி ஹோவ் சர்வதேச பாலத்தைத் திறப்பதையே இவ்வாறு தடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நாங்கள் அவர்களுக்கு வழங்கிய அனைத்திற்கும் அமெரிக்கா முழுமையாக இழப்பீடு பெறும் வரை இப்பாலத்தைத் திறக்க நான் அனுமதிக்க மாட்டேன்’ என்றும் அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இப்பாலம் கனேடிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகின்ற போதிலும் கனடாவுக்கும் மிச்சிகனுக்கும் சொந்தமான பொதுவான சொத்தாக இருக்கும் என கருத்திட்ட இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் மிச்சிகன் மாநில செனட்டர் எலிசா ஸ்லாட்கின், ‘நம்ப முடியாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விளங்கும் இப்பாதையை மூடுவது நமது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றுள்ளார். டெட்ராய்ட் நதியைக் கடந்து செல்லும் இப்பாலம், இவ்வாண்டின் தொடக்கத்தில் முறையான சோதனைகள் மற்றும் ஒப்புதல்கள் கிடைக்கப் பெற்றதும் போக்குவரத்துக்குத் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதையின் நிர்மாணப்பணிகள் கடந்த 2018 இல் தொடங்கியமை தெரிந்ததே.இப்பாதை திறக்கப்படுவதை எவ்வாறு தடுக்க முடியும் என்பதை ட்ரம்ப் தெளிவாகத் தெரிவிக்காத போதிலும் திறப்பதற்கான பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றும் மிச்சிகன் மாநில செனட்டர் எலிசா கூறியுள்ளார்.
