News

ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கின. முதல் தாக்குதல், ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி அலுவலகம் அருகே நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதற்கு சாத்தியமான நிறைய அறிகுறிகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கமேனி கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

”வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, உலகளவில் கமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி.

அமெரிக்காவின் உளவுத் துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. மேலும், இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது. இனி ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பிற பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் போராட விரும்பவில்லை.

தேச பக்தர்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து, நாட்டை மகத்துவமாக்க செயல்படும் என்று நம்புகிறோம். அந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். கமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது.

இருப்பினும், ஒரு வார காலம் அல்லது மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும் வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கமேனி மட்டுமல்லாமல், அவரது மருமகன், பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதே, புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன. அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலால், ஈரான் தலைநகா் டெஹ்ரான் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும், பெரும்பாலான பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு மகளிா் தொடக்கப் பள்ளி மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 85 மாணவிகள் உயிரிழந்தனா், 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top