ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அடைக்கலம் கோரியிருந்த நிலையில், மார்ச் 1ஆம் திகதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய நாட்களில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் நிகழ்வுகளுடன் தொடர்புடைய மூன்றாவது ஈரானிய கடற்படைக் கப்பல் இதுவாகும்.
இந்தியா கடற்படைப் பயிற்சிகளில் இருந்து திரும்பும் போது, இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டெனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ செய்து மூழ்கடித்தது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரானிய கப்பலான IRIS Bushehr, தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தது.
அதனைதொடர்ந்து, இலங்கை மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு அதன் பணியாளர்களை வெளியேற்றி கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்தது.
IRIS Dena அழிக்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கையின் காவலில் உள்ள IRIS Bushehr மற்றும் இந்தியாவின் காவலில் உள்ள IRIS Lavan ஆகிய ஈரானிய கப்பல்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
