அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈஸ்பஹானின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து சர்வதேச அளவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க ஈரானின் ஈஸ்பஹான் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண ஆளுநர் மெஹ்தி ஜமாலினேஜாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், போர் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது ஈஸ்பஹானின் பழங்காலக் கட்டிடங்கள் இலக்கு வைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதற்கான இழப்பீட்டைப் பெறுவதற்கும், குற்றவாளிகளைச் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் ஒரு சட்டக் குழு வழக்கைச் சித்தம் செய்து வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆளுநர் ஜமாலினேஜாத் வழங்கிய தகவல்களின்படி தாக்குதலால் ஈஸ்பஹானின் புகழ்பெற்ற கிராண்ட் பஜார் (Grand Bazaar) பகுதிக்குள் அமைந்துள்ள சுமார் 203 இடங்களும் 28 மிக முக்கியமான வரலாற்று நினைவுச் சின்னங்களும் பாரிய சேதமடைந்துள்ளன.
இந்தத் தளங்கள் உலகப் பாரம்பரியச் சின்னங்களாகக் கருதப்படுபவை என்பதால் அவற்றுக்கு உடனடியாக மறுசீரமைப்புப் பணிகள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் ஆன்மாவைச் சிதைக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் சர்வதேச போர் விதிமுறைகளை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
