News

ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் தனது நிபந்தனைகளை ஏற்காவிட்டால், அந்த நாட்டின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அடியோடு அழிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மிகவும் நியாயமான ஒரு ஒப்பந்தத்தை ஈரானுக்கு வழங்குகிறோம். ஈரான் அதனை ஏற்கும் என நம்புகிறேன். இல்லையெனில், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் நல்ல மனிதாராக இருக்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு வார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இறுதி முயற்சி எடுக்க அமெரிக்க தூதுக்குழு திங்கள்கிழமை மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்குச் செல்லவுள்ளது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது குறித்து ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்கா தனது துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்குச் செல்லலாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை சனிக்கிழமை மீண்டும் மூடப்பட்டது. அந்த வழியாகச் செல்ல முயன்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

8-வது வாரமாக நீடிக்கும் இந்தப் போரினால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலைகள் உலகெங்கும் உச்சத்தை எட்டியுள்ளன.

திங்கள்கிழமை சந்தைகள் திறக்கப்படும்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்கா தனது சிவிலியன் உட்கட்டமைப்புகளைத் தாக்கினால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் அந்த நாடுகளின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top