சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்பட்டும் வரும் அந்நாட்டு நாடாளுமன்ற உறப்பினர் ரொனால்ட் டெலா ரோசா (Ronald dela Rosa) தனக்கு எதிரான கைது நடவடிக்கையிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு வலியுறுத்தி, செனட் சபையில் தஞ்சமடைந்தபோது ஏற்பட்ட குழப்பகரமான தருணத்தில் இராணுவ வீரர்களும் செனட் சபை கட்டடத்துக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உள்நுழைந்துள்ளனர்.
அவ்வேளை ஏற்பட்ட மோதலில் பல முறை துப்பாக்கிச் சூடு சத்தம் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பது பற்றியோ அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழு விபரங்களோ இன்னும் வெளியாகவில்லை.
அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரொனால்ட் டெலா ரோசா தனக்கு எதிரான கைது நடவடிக்கையிலிருந்து தன்னை காக்குமாறு பொதுமக்களிடமும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்தேவின் (Rodrigo Duterte) ஆட்சிக் காலத்தில் காவல்துறைத் தலைவராக ரொனால்ட் டெலா ரோசா இருந்துள்ளார்.
அப்போது செயற்படுத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான போதைப்பொருள் வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் வேளையில் பொதுமக்களைக் கொன்றதாக அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி துதெர்த்தே 2025 மார்ச் மாதம் முதல் நெதர்லாந்தின் தி ஹேக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் செனட் சபையில் தஞ்சமடைந்த டெலா ரோசா, அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போதான பதற்றகரமான சூழ்நிலைக்குப் பின்னர், டெலா ரோசா பாதுகாப்பாக படையினருடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
