பாகிஸ்தானில் அமைந்துள்ள ‘ப்ரோட் பீக்’ மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அவரது சுற்றுலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று, உலகின் 12ஆவது உயரமான சிகரமான 8,051 மீற்றர் உயரமுடைய ப்ரோட் பீக் மலையை ஏறும்போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அமெரிக்கா, ஓமன், சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களையும் வெறும் 6 மாதங்களுக்குள் ஏறி சாதனை படைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிர்மல் புர்ஜா, நவீன மலையேற்ற வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
