கனடா டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரின் உடைமையிலிருந்து 44 கிலோ ஹஷிஷ் (hashish) மற்றும் 13 கிலோ கொக்கைன் ஆகியவற்றை கனடிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கனடா எல்லைச் சேவை முகமையின் (CBSA) தகவலின்படி, இப்பொருட்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவிருந்தன.
அந்தப் பயணி கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் ரோயல் கனடிய மவுண்டட் காவல்துறையினரிடம்(RCMP) ஒப்படைக்கப்பட்டதாக முகமை தெரிவித்துள்ளது.
CBSA வெளியிட்ட புகைப்படங்களில், மூன்று சூட்கேஸ்களுடன் சேர்த்து சந்தேகத்திற்குரிய போதைப்பொருட்கள் அடங்கிய பல பொட்டலங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இப்பறிமுதல் நடவடிக்கை செப்டம்பர் 3-ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது; இது குறித்த தகவலை CBSA செப்டம்பர் 23-ஆம் திகதி பொதுவெளியில் அறிவித்தது.
சந்தேக நபர் குறித்த விவரங்களையோ அல்லது இப்பறிமுதல் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களையோ கனடிய அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
