News

திலீபனின் சிலை அகற்றம்! நாளை எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எட்டு மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நல்லூர் நினைவாலயப் பகுதியில் திலீபனின் நினைவாக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலையை இன்று(27) அதிகாலை பொலிஸார் அகற்றிச் சென்றனர்.

ஜனநாயக முறைப்படி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்தச் செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் இந்த அத்துமீறலைக் கண்டித்தும், தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகளை எதிர்த்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ள பிரதான இடங்கள் பின்வருமாறு,

01. யாழ்ப்பாணம் மாவட்டம்: நல்லூரடி

02. திருகோணமலை மாவட்டம்: சிவன் கோவிலடி

03. கிளிநொச்சி மாவட்டம்: கந்தசாமி கோவிலடியிலிருந்து கச்சேரி வரை

04. அம்பாறை மாவட்டம்: தம்பிலுவில் மத்திய சந்தையடியில் ஆரம்பித்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரை

05. மன்னார் மாவட்டம்: தந்தை செல்வா நினைவுத் தூபியடி

06. மட்டக்களப்பு மாவட்டம்: காந்தி பூங்கா வடிவில்/ காந்தி பூங்கா அருகில்

07. வவுனியா மாவட்டம்: பொங்குதமிழ் நினைவுத் தூபியடியிலிருந்து பழைய பஸ் நிலையம் வரை

08. முல்லைத்தீவு மாவட்டம்: மாங்குளம் சந்தி

தமிழர்களின் உரிமைகள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையிலும், தியாகி தீபம் திலீபன் நினைவேந்தல் உரிமைக்குரலை வலுப்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் உறவுகளும் பெருமளவில் திரண்டு கலந்துகொள்ளுமாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top