சைபீரியாவில் நேற்று (செவ்வாய் கிழமை) இரவு ரஷிய ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக விமானத்தில் இருந்த 19 பேரும் உயிரிழந்ததாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அன்டோனோவ் ஆன்-12 ரகத்தை சேர்ந்த அந்த விமானம், திட்டமிடப்பட்ட பயணத்தின்போது சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் விழுந்து நொறுங்கியது. உயிரிழந்த 19 பேரில் விமான ஊழியர்களும் அடங்குவர்.
பிராந்தியத் தலைநகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யகுனோவோ கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததை கேமரோவோ பிராந்திய ஆளுநர் இல்யா செரெட்யுக் உறுதிப்படுத்தியதாக ‘தி மாஸ்கோ டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, விமானத்தின் நான்கு என்ஜின்களில் ஒன்றில் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கசிவின் காரணமாக தீப்பிடித்து, அதன் கட்டுப்பாடுகள் செயலிழந்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கெமரோவோவில் நடந்த ஆன்-12 விமான விபத்திற்கு எரிபொருள் கசிவு, இயந்திரத்தில் தீப்பிடித்தல் மற்றும் ஹைட்ராலிக் கோளாறு ஆகியவை முக்கிய சந்தேகத்திற்கிடமான காரணங்கள் என ரஷிய செய்தி நிறுவனமான பாஸா தெரிவித்துள்ளது.
விமானத்தின் என்ஜின்களில் ஒன்று எரிந்துவிட்டதாகவும், அதன் எரிபொருள் அமைப்பு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
ஒரு புலனாய்வு குழுவும், விமான விபத்துகள் புலனாய்வு ஆணையமும் விபத்திற்கான சரியான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன.
