அமெரிக்காவுடனான தனது நாட்டின் உறவுகள் பலவீனங்களாக மாறிவிட்டன என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா தனது வர்த்தக அணுகுமுறையை அடிப்படையாக மாற்றியுள்ளது; பெரும் பொருளாதார மந்தநிலையின் போது கடைசியாகக் காணப்பட்ட அளவிற்கு தனது வரிகளை உயர்த்தியுள்ளது,” என்று ‘முன்னோக்கிய வழிகாட்டுதல்’ என்ற தலைப்பிலான காணொளி உரையில் கார்னி கூறினார்.
“அமெரிக்காவுடனான நமது நெருங்கிய உறவுகளை அடிப்படையாகக் கொண்ட நமது முந்தைய பலங்கள் பல, நமது பலவீனங்களாக மாறிவிட்டன; இந்தப் பலவீனங்களை நாம் சரிசெய்ய வேண்டும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“நம்பிக்கை ஒரு திட்டமல்ல, கடந்தகால ஏக்கம் ஒரு உத்தியல்ல,” என்று கூறிய அவர், அமெரிக்காவினால் ஏற்படும் இடையூறுகள் திடீரென நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் கனடா தனது எதிர்காலத்தைப் பணயம் வைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தனது தெற்கு அண்டை நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையை பெருமளவில் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சியமிக்க பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு உத்தியை அவர் வெளியிட்டார்.
ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில், கனடா நான்கு கண்டங்களில் ஏற்கனவே 20 புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், “உலகம் விரும்புவது கனடாவிடம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து ஒட்டாவாவிற்கும் வோஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்துள்ளன. கனடியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகளும், கனடா 51வது மாநிலமாக மாற வேண்டும் என்ற ட்ரம்பின் தொடர்ச்சியான கூற்றுகளும் உறவுகளை முடக்கியுள்ளன.
வோஷிங்டனிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், புதிய கூட்டாளிகளையும், புதிய எரிசக்தி மற்றும் அரிய கனிம வளங்களை கண்டறியவும் கனடா மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க விரும்புகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை கனடாவின் புதிய பாதுகாப்பு உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் கார்னி அறிவித்துள்ளார்.
