News

உலக சாதனை முறியடிப்பு: 32ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி ‘எவரெஸ்ட் மனிதன்’ காமி ரீட்டா வரலாற்று மைல்கல்!

 

 

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செர்ப்பா வழிகாட்டியான காமி ரீட்டா செர்ப்பா உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை 32ஆவது முறையாகக் கடந்து, கடந்த ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட சொந்த உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்.

’14 பீக்ஸ் எக்ஸ்பெடிஷன்’ நிறுவனத்தின் ஊடாக வருகை தந்த மலையேற்றக் குழுவினருக்கு வழிகாட்டியாகச் சென்ற 56 வயதான காமி ரீட்டா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) முற்பகல் 10:12 மணியளவில் 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

காமி ரீட்டாவின் இந்த ‘வரலாற்று மைல்கல்’ சாதனையைப் பாராட்டியுள்ள நேபாள சுற்றுலாத்துறை திணைக்களம், சர்வதேச மட்டத்தில் நேபாளத்தின் மலை உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பிட்டுள்ளது.

காமி ரீட்டா செர்ப்பா முதன்முதலில் 1994ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார்.

2014, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதைத் தவிர, ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் அவர் சிகரத்தை ஏறியுள்ளார். சில ஆண்டுகளில் இரண்டு முறை கூட சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் 1953 இல் வென்ற டென்சிங் நோர்கேயின் அதே ‘தாமே’ கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 52 வயதான நேபாள செர்ப்பா பெண்மணியான லக்பா (Lhakpa Sherpa) நேற்று தனது 11ஆவது எவரெஸ்ட் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறிய பெண் என்ற தனது சொந்த உலக சாதனையை அவரும் நீடித்துள்ளார்.

செர்ப்பா அல்லாத வெளிநாட்டு மலையேறுபவர்களில், பிரித்தானிய வழிகாட்டியான கென்டன் கூல் 19 முறைகளும், அமெரிக்க வீரர்களான டேவ் ஹான் மற்றும் காரெட் மேடிசன்ஆகியோர் தலா 15 முறைகளும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளனர்.

தற்போதைய மார்ச்-மே மாத மலையேற்றக் காலப்பகுதிக்காக நேபாள அரசு 492 அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ள நிலையில், நடப்பு மாதத்தில் மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளமை மலையேற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top