News

பிலிப்பைன்ஸில் பற்றி எரிந்த பயணிகள் படகில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்பு

பிலிப்பைன்ஸில் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது.

கடும் வெப்பம் மற்றும் புகை காரணமாக மீட்புக் குழுவினர் கப்பலுக்குள் நுழைய சிரமப்பட்டதால், உள்ளே சிக்கியிருக்கக்கூடிய பயணிகளைத் தேடும் பணிகள் தாமதமாயின. இதனால் மேலும் சில உடல்கள் படகுக்குள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவகையில், மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான கோரோன் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற படகில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெளிநாடொன்றில் பற்றி எரிந்த பயணிகள் படகு - பறிபோன 35 உயிர்கள்: தொடரும் மீட்பு | Death Toll From Philippines Ferry Fire Rises To 35

சம்பவத்தின் போது படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என 134 பேர் பயணித்துள்ளனர். இதுவரை 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான உடல்கள் பயணிகள் உறங்கும் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் நோயெமி கயாப்யாப் தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சரக்கு வைக்கும் பகுதியில் இருந்தே தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், சில பயணிகள் உயிர்காக்கும் கவசங்களை அணியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படகு விபத்து தொடர்பான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கடல்சார் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top