கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானம் புறப்பட்ட உடனேயே அதன் இரண்டு இன்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது என்று முதற்கபட்ட ஆய்வில் தெரியவந்தது.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.
ஆனால் அதை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக விமானி சபர்வாலின் 91 வயது தந்தை, இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
