News

வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தி தீவிரம் – சர்வதேச அணுசக்தி முகவரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தித் திறனில் “மிகத் தீவிரமான வளர்ச்சி” ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) தலைவர் ரஃபேல் குரோசி தெரிவித்துள்ளார்.

சியோலில் இன்று(15.04.2026) செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகொரியாவின் யொங்பியோன் (Yongbyon) அணு உலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற வசதிகளின் செயல்பாடுகள் மிக வேகமாக அதிகரித்துள்ளதைச் செயற்கைக்கோள் பதிவுகள் மற்றும் பிற மதிப்பீடுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டல் மற்றும் ஏனைய மறுசுழற்சி அலகுகள் தற்போது முழு வீச்சில் இயங்கி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

யொங்பியோன் அணு தளத்தில் புதிய வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளதையும், அதன் மூலம் வடகொரியாவின் அணு ஆயுதக் கொள்ளளவு பல டசின் கணக்கில் அதிகரித்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஆய்வாளர்களைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்க வடகொரியா மறுத்து வரும் நிலையில், தற்போதைய இந்த வளர்ச்சி உலகளாவிய பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதேவேளை, உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரியா தனது படைகளை அனுப்பி வரும் நிலையில், அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து இராணுவத் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று வருவதாக அவதானிகள் குறிப்பிட்டாலும், அணுசக்தி மேம்பாட்டில் ரஷ்யாவின் நேரடிப் பங்களிப்பு குறித்துத் தமக்குத் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என ரஃபேல் குரோசி மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top