News

இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம் ; மின்தடை, ரயில் சேவைகள் பாதிப்பு!

 

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு  அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் மின்சார விநியோகம், ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு சில கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7:46 மணிக்கு (GMT 1746) நிலவிய இந்நிலநடுக்கம், நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் சுமார் 3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இத்தாலியின் தேசிய புவிப் பௌதிகவியல் மற்றும் எரிமலை இயல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக நேபிள்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குச் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இத்தாலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை மீட்புப் பணிகளுக்கான அவசர அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கான உள்ளூர் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று என இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளை நோக்கி ஓடிவந்து தஞ்சமடைந்தனர்.

அடர்ந்த மக்கள் தொகையைக் கொண்ட எரிமலைப் பகுதியான கம்பீ பிளெக்ராய் பகுதியில் சமீபத்திய வருடங்களாக நிலநடுக்க அதிர்வுகள் அதிகரித்து வருகின்றன.

சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு வழக்கமானவை என்றாலும், இதுபோன்ற வலுவான அதிர்வுகள் 1980களின் தொடக்கத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு நெருக்கடியை நினைவூட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரண நிகழ்வாகும். கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 300 பேர் வரை உயிரிழந்தனர்.

அதேபோல, 1980ஆம் ஆண்டு நவம்பரில் தெற்கு இத்தாலியின் இர்பினியா  பகுதியில் ஏற்பட்ட 6.9 ரிச்டர் அளவிலான மிக மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 2,700 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top