News

நோர்வேயில் முதல் முறையாக போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் பெண்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

38 வயதான கம்சி குணரத்னம், நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராவார்.

ஒஸ்லோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல்  போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த ஜோன்-இவர் நிகார்டை பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி | Kamzy Gunaratnam Named Norway S Transport Minister

கம்சி குணரத்னத்தின் பொறுப்பின் கீழ் நோர்வேயின் வீதிகள், தொடருந்து, பொது போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வருகின்றன. அவரது நியமனம் தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கம்சி குணரத்னத்திடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதுடன், அவர் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறார்.

கடந்த சில தசாப்தங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக் குழுவில் 11 மாதங்கள் பணியாற்றிய அனுபவத்தைத் தவிர, போக்குவரத்துத் துறையில் அவருக்கு விரிவான அனுபவம் இல்லை என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கம்சி குணரத்னம் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய அவரது குடும்பம், 1991ஆம் ஆண்டு நோர்வேக்கு சென்றது.

அவர்கள் ஆரம்பத்தில் நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்மர்ஃபெஸ்ட் நகரில் குடியேறிய பின்னர், ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரோருட்டலன் பகுதியில் கம்சி குணரத்னம் வளர்ந்தார்.

அவர் ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் பிரதி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளுக்கான நிலைக்குழுவின் முதலாவது பிரதி தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

போரின் நினைவுகளை பகிர்ந்த கம்சி இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற தனது அனுபவங்களை கம்சி குணரத்னம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் தான் பிறந்ததாகவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தனது தாய் பாதுகாப்புக்காக பதுங்கியதாகவும் நினைவுகூர்ந்திருந்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top