News

கனடாவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய இளம்பெண்

கனடாவில், பூங்கா ஒன்றில் இந்திய இளம்பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில், இளம்பெண்ணொருவர் வெகு நேரமாக சலனமற்ற முறையில் அமர்ந்திருந்ததைக் கண்ட மக்கள் அவரை அழைத்துள்ளனர்.

அவர் பதிலளிக்காததால் சிலர் அருகில் சென்று அவரை பரிசோதிக்க, அவர் சுயநினைவிழந்திருப்பது தெரியவரவே, உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த பொலிசார் அந்தப் பெண்ணை பரிசோதிக்கும்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

விசாரணையில், அவரது பெயர் அன்மோல்தீப் கௌர் (26) என்றும், அவர் 2021ஆம் ஆண்டு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து கனடா வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கௌர், இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் ஆவார். ஒன்ராறியோவிலுள்ள Barrie என்னுமிடத்தில் தங்கி படித்துவந்த கௌர், வாக்கிங் செல்வதற்காக வெளியே வந்துள்ளார்.

அதன்பின் அவர் அந்தப் பூங்காவில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கௌரின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ள பொலிசார், அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக அப்பகுதியிலுள்ள CCTV கமெராக்களை ஆய்வுக்குட்படுத்திவருவதுடன் விசாரணை ஒன்றையும் துவக்கியுள்ளார்கள்.

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் தன் தாய்க்காக கௌர் விசிட்டர் விசா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

கனடாவுக்குச் சென்று கௌரை சந்திக்க அவரது தாய் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் உயிரிழந்துவிட்டார் என்னும் செய்தியைக் கேட்டு, நம்ப இயலாமல் திகைத்துப்போயிருக்கும் அவரது பெற்றோர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top