பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கடிதத்தில்,
“பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் பிரதமருடன் நான் பல ஆண்டுகளாக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன்.
இந்தச் சமூகச் சீர்கேட்டைச் சரிசெய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் பிரதமரிடம் இருப்பதை நான் அறிவேன். இருப்பினும், இந்தத் துறையில் உண்மையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் எப்போதுமே என்னால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்குப் பிறகே நிகழ்ந்தன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டான சூழல்களைப் பயன்படுத்தி பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்க தான் முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஸ்டார்மரை நோக்கி நேரடியாகக் கருத்து தெரிவித்துள்ள அவர், “நீங்கள் அடிப்படையில் ஒரு நல்ல மனிதர், சரியான விஷயங்களில் அக்கறை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன்.இருப்பினும், அது மட்டுமே போதுமானதல்ல என்பதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்.
எங்கே விவாதம் வந்துவிடுமோ என்ற அச்சத்தால் நாம் எந்தவொரு வாதத்தையும் முன்வைப்பதில்லை. இதனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் முடங்கிப் போகின்றன,” என்று சாடியுள்ளார்.
கண்ணியமும் ஆர்வமும் அரசியலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குப் போராடும் குணமும் வேகமும் அவசியம் என்று ஜெஸ் பிலிப்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள், வாதங்களை முன்வையுங்கள், மக்களை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். அரசியல் என்பது வெறும் கொள்கைகள் சார்ந்தது மட்டுமல்ல, அது மக்களின் உணர்வுகளோடும் தொடர்புடையது,” என்று அவர் கூறியுள்ளார்.
தொழிற்கட்சி அரசாங்கம் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் நாடும் தானும் எதிர்பார்த்த மாற்றங்கள் தற்போதைய தலைமையின் கீழ் நிகழவில்லை என்பதால், அமைச்சராகத் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
உள்ளூர் தேர்தல் தோல்வி மற்றும் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், ஒரு அமைச்சரின் இந்த பகிரங்கமான விமர்சனங்களுடன் கூடிய பதவி விலகல் பிரதமர் கீர் ஸ்டார்மருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
